மே 3க்கு பிறகு ரயில்கள், விமான சேவைக்கு சிக்கல்

புதுடில்லி:


கொரோனா பரவலை தடுக்க சமூக விலகல் அவசியம் என்பதால், மே 3ம் தேதிக்கு பிறகு ரயில்கள், விமான போக்குரத்து இயல்பாக இயங்குவதற்கான சாத்தியங்கள் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மே 3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்தார். ஊரடங்கு காலம் என்பதால், அனைத்து பொது, தனியார் போக்குரவத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மே 3க்கு பிறகும், முன்பதிவு எதுவும் செய்ய வேண்டாம் என அனைத்து விமான நிறுவனங்களும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை குழு கூட்டத்திலும் ரயில், விமான போக்குவரத்தை துவங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஊரடங்கு முடிந்த பின்பும் சமூக விலகல் அவசியம் என்பதால், சேவையை துவங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அமைச்சர்களும் கவலை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



 


இந்நிலையில், உள்நாட்டு, சர்வதேச வான்வழி தடங்களை திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தனது டுவிட்டர் பதிவில், 'விமான போக்குவரத்து குறித்து அரசு தனது முடிவினை அறிவித்த பிறகே, விமான நிறுவனங்கள் தங்கள் முன்பதிவை துவக்க வேண்டும்' என பதிவிட்டுள்ளார்.